முன்னுரை

raviவணக்கம்.

2005 முதல் தமிழ் குறித்து என் வலைப்பதிவில் எழுதிய கட்டுரைகளில் சிலவற்றை இங்கு தொகுத்து உள்ளேன்.

கையடக்கக் கருவிகளில் தமிழ் நூல் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கட்டற்ற நூல்களை உருவாக்க வேண்டும் என்ற நண்பர் சீனிவாசனின் Free Tamil Ebooks திட்டம் மிகவும் பிடித்திருந்தது. எனது வலைப்பதிவு இடுகைகளை கட்டற்ற உரிமத்தில் தர வேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்திருந்தாலும், இத்திட்டமே அதற்கான தூண்டுகோல். எனது கட்டுரைகளை மின்னூல் வடிவில் இட்டுப் பார்த்த போது பெற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இதே போல் இன்னும் பலரும் தங்கள் நூல்களை கட்டற்ற உரிமத்திலும் மின்னூல் வடிவத்திலும் தர முன்வருவது பெரும் புரட்சியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்நூலின் முதற்பதிப்பை வெளியிட்டு 1000 பதிவிறக்கங்களுக்கு மேல் கண்டது. இதை விடப் பெரும் மகிழ்ச்சி என்னவென்றால், Free Tamil Ebooks திட்டம் மூலம் பரவலாக அறியப்பெற்ற எழுத்தாளர்கள் உட்பட பலரும் தங்கள் நூல்களை கட்டற்ற உரிமங்களில் மின்னூலாகத் தர முன்வந்தது தான்.

இப்போது அடுத்த கேள்வி.

தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்களைத் தாங்களே மின்னூல் வடிவத்தில் இணையத்தில் விற்க முடியுமா?

அமேசான் உள்ளிட்ட உலகப் பெரு நிறுவனங்கள் முதல் NHM Reader உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்கள் வரை இதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், வாசகர்கள் – எழுத்தாளர்கள் இருவருக்கும் கட்டுப்பாடுகளை விதிக்காத, பரவலான எழுத்தூக்கத்துக்குத் துணை நிற்கிற ஒரு வணிக மாதிரியை உருவாக்க வேண்டியிருக்கிறது.

இக்கேள்விக்கான விடை தேடும் முதல் முயற்சியே இந்நூல். கூடுதலாக 15 கட்டுரைகளைச் சேர்த்து இரண்டாம் பதிப்பை வெளியிடுகிறேன். இதற்கு நீங்கள் தரும் ஆதரவு, ஓலைச்சுவடிகளில் இருந்து அச்சு ஊடகத்துக்கு அறிவு பெயர்ந்தது போல, தமிழின் அறிவுச் செல்வங்களை அச்சில் இருந்து இணையத்துக்குப் பெயர்த்து வரும் முயற்சிக்கு உந்துதலாக இருக்கும்.

உங்கள் ஆதரவை நாடி,

அன்புடன்,

இரவி

26 சனவரி 2014

Comments are closed.