26 பெயர்ச்சொல் தமிழாக்கம்

அமெரிக்க மாநிலமான Rhode Islandஐ ரோட் தீவு என்று தினமலர் எழுதி இருந்ததைக் கண்டித்து பாஸ்டன் பாலா எழுதி இருந்தார்.

தினமலர் செய்யும் தமிழ்க்கொலைகள், ஆங்கிலத் திணிப்பு தனிக்கதை. எப்போதாவது யாராவது இப்படி சரியாகத் தமிழாக்கும் போதும் விமர்சனத்துக்குள்ளாகிறது !! இப்படி விமர்சிப்பவர்களின் வழக்கமான உத்தி என்னவென்றால், தவறான தமிழாக்கங்கள், நடக்கவே வாய்ப்பில்லாத அபத்தமான தமிழாக்கங்களைச் சுட்டிக்காட்டி சரியான தமிழாக்கங்களை கேலிக்குள்ளாக்குவது. எடுத்துக்காட்டுக்கு, George bushஐ ஜார்ஜ் புதர் என்றா தமிழாக்குவீர்கள் என்று கேட்பார்கள்.

http://en.wikipedia.org/wiki/Rhode_island கட்டுரையில் இடப்பக்கம் உள்ள வேற்று மொழி விக்கிப்பீடியாக்களுக்கான தொடுப்புகளைப் பார்க்கலாம். மலாய் உள்ளிட்ட பல மொழிகளில் ஐலண்ட் என்று எழுதுவதற்குப் பதில் உள்ளூர் மொழிச் சொல்லையே ஆண்டிருக்கிறார்கள். தமிழிலும் றோட் தீவு என்றே எழுதி இருக்கிறோம். றோட் என்பது ஈழ வழக்கு, ரோட் என்று எழுதி இருந்தால் தமிழக வழக்காகி இருக்கும். Rhode என்ற இடுகுறிப்பெயர்ச்சொலைப் புரிந்து கொண்டு அதை roadஆகக் கருதி மொழிபெயர்க்காமல் விட்டிருப்பது சரி.

http://en.wikipedia.org/wiki/British_Virgin_Islands கட்டுரையில் இடப்பக்கம் உள்ள வேற்று மொழி விக்கிப்பீடியாக்களுக்கான தொடுப்புகளைப் பார்க்கலாம். பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில் Virgin, Island இரண்டையுமே மொழிபெயர்த்த்திருக்கிறார்கள். தமிழிலும் பிரித்தானியக் கன்னித் தீவுகள் என்றே எழுதி இருக்கிறோம்.

தகுந்த இடங்களில் Valley, Island போன்ற காரணப் பெயர்ச்சொற்களை மொழிபெயர்ப்பது சரியே.

மொழிபெயர்ப்புகள் போக, ரஷ்யாவை ருசியா என்றும் கிரீஸை கிரேக்கம் என்றும் அழைப்பதையும் சிலரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ரஷ்யா, ஸ்பெயின், ஜெர்மனி என்றெல்லாம் அழைத்துக் கொண்டிருப்பது ஆங்கில அல்லது அனைத்துலகப் பெயர்களே. அவை உள்ளூர்ப் பெயர்கள் அல்ல. உள்ளூர்ப் பெயர்களின் ஒலிப்புக்கு நெருங்கி அழைப்பது தான் அவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை. தமிழ் என்று அழைப்பவரை விரும்புவீர்களா? டேமில் என்று அழைப்பவர்களை விரும்புவீர்களா?

ஜெர்மனியின் உள்ளூர்ப்பெயர் இடாயிட்சுலாந்து. இதேயே கூட பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு ஐரோப்பிய மொழியும் ஒவ்வொரு மாதிரி அழைக்கிறது. நோர்வேக்காரர்கள் ஸ்பெயினை ஸ்பானியா என்கிறார்கள். தமிழில் எசுப்பானியா என்று எழுதலாம். கிரீஸை நெதர்லாந்து மொழியில் Griekland என்கிறார்கள். அதாவது கிரேக்க மொழி பேசும் நாட்டை கிரேக்க நாடு என்றும் கிரேக்கம் என்றும் அழைக்கிறோம். எகிப்து நாட்டின் விக்கிப்பீடியா பக்கத்தில் போய் பார்த்தால் எகிப்து என்ற ஒலிக்கே தொடர்பில்லாமல் ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு மாதிரி அழைக்கிறது. இவற்றக்கு வரலாற்றுக் காரணங்கள் உண்டு. ஆங்கிலம் தமிழருக்கு அறிமுகமாவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே தமிழருக்கு உலக நாடுகள் பலவற்றோடு வணிக, அரசியல் தொடர்புகள் உண்டு. ஆக, தமிழில் உள்ள பெயர்கள் இந்நாட்டுகளின் உள்ளூர்ப்பெயர்களை ஒத்திருப்பது தானே இயல்பு? அப்படி இருப்பது தான் அந்த வரலாற்றுத் தொடர்புகளையும் அறிமுகத்தையும் சுட்டவும் உதவும்.

நாட்டுப் பெயர்கள் தவிர, ஊர்ப்பெயர்கள், மொழிகளின் பெயர்கள் என்று பல இடுகுறிப் பெயர்களும் கூட உள்ளூர் ஒலிப்பு, பேசப்படும் மொழியின் இலக்கணம் ஆகியவற்றுக்கு ஏற்ப இசைந்தும் திரிந்தும் ஒலிப்பது இயல்பே. ஆங்கிலம் அறியா ஐரோப்பிய பாதிரிமார்கள் (பாதிரி என்ற சொல்லே இத்தாலிய மொழியில் இருந்து நேரடியாக வந்தது) நேரடியாக மூல மொழியில் இருந்த மொழிபெயர்த்த தமிழ் விவிலியத்தில் ஆங்கில கிறித்தவப் பெயர்கள் இல்லாதிருப்பதைக் காணலாம். Mary மரி ஆவாள். Mathew மத்தேயு ஆவான். இதில் நகைக்கவும் கண்டிக்கவும் ஒன்றும் இல்லை.

எனவே, முன்னை விட உலகின் பல பகுதிகளிலும் தமிழர்கள் பரவி வாழும் இந்த வேளையில் அந்தந்த உள்ளூர் வழக்கங்களை நேரடியாகத் தமிழுக்குக் கொணர்வதே தமிழை வளப்படுத்தவும் அவ்வூர் வழக்கங்களைச் சிறப்பிக்கவும் உதவும்.

நேரடியாக அந்தந்த மொழியினருடன் தொடர்பு கொள்ள இயலும் போது இடையில் ஆங்கிலம் எதற்கு?

பி.கு – தென்னாப்பிரிக்காவையும் வட கொரியாவையும் சௌத்தாப்பிரிக்கா என்றும் நார்த் கொரியா என்றும் அழைக்க வேண்டும் என்று சொல்லும் அறிவாளிகளும் இருக்கிறார்கள் 🙂 !!

License

தமிழ் இன்று Copyright © 2014 by Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *