14 தமிழ் சோறு போடும்

தமிழ் – இந்தி – ஆங்கிலம் தொடர்புடைய உரையாடல்கள் எங்கு வந்தாலும் எட்டிப்பார்க்கும் ஒரு கருத்து:

“தமிழ்நாட்டுக்கு இந்தி தேவை இல்லை. அதனால் நாங்கள் படிக்கத் தேவை இல்லை. வேலைவாய்ப்புகள் / பொருளீட்டலுக்கு ஆங்கிலம் தேவை. அதனால் படிப்போம். பண்பாடு பேண தாய்மொழி / தமிழ் தேவை”

“சோற்றுக்கு ஆங்கிலம், தனி மனித உணர்வுகளுக்கு, பண்பாட்டுக்குத் தாய் மொழி / தமிழ்” என்ற மயக்கம் தரும் கருத்தைப் பலரும் கேள்வி இன்றி ஏற்றுப் பரப்புகிறார்கள். இதனால் தான் “தமிழ் ஒரு உதவாக்கரை மொழி” போன்ற சொல்லாடல்களும், “தமிழ் படித்து என்ன பயன்” போன்ற கேள்விகளும் வருகின்றன.

உண்மையில், ஆங்கில அறிவால் மட்டுமே ஈழம், தமிழ்நாட்டில் சோறு உண்பவர் எத்தனை பேர்? அரசு, தனியார் பணிகளில் வெள்ளைச் சட்டை வேலை பார்ப்போர் ஒரு பகுதியினருக்கும் பிற மாநிலங்கள், நாடுகள் போவோருக்கும் ஆங்கிலம் தேவைப்படலாம். முழுக்க ஆங்கிலம் பேசா தென்னமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்குப் போவோருக்கு அந்த ஆங்கிலமும் தேவை இல்லை.

ஆனால், தமிழ்நாட்டில் ஆங்கிலமே தெரியாமல் எத்தனையோ உழவர்கள், சிறு தொழில் முனைவோர், தொழிலாளர்கள், பெரு வணிகர்கள், கலைஞர்கள் வாழவில்லையா? ஆங்கில மொழியறிவு கூடுதலாக சில பலன்களைப் பெற்றுத் தரலாம். நடப்பு உலகில் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை எந்த விதத்திலும் மறுக்கவில்லை. ஆனால், ஆங்கிலத்தின் நன்மையை விளக்கும் பொருட்டு மற்ற மொழிகளின் பொருளாதார முக்கியத்துவத்தைக் குறைத்துச் சொல்வது தவறு.

பொருள் ஈட்டுவதற்கு எத்தனையோ வழிகளும் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு எத்தனையோ காரணங்களும் உள்ளன. அதற்கு தமிழே / தாய்மொழியே / ஒரு மொழியே போதும். பிற திறன்கள் உள்ள நிலையில், தேவைப்படும் மொழியறிவை ஒரு சில மாதங்களில் பெற்றுக் கொள்ள இயலும்.

தமிழும் சோறு போடும். தமிழ் சோறும் போடும்.

**

கட்டுரை பற்றி உரையாட, வாசகர்களின் கருத்துகளை அறிய இங்கு வாருங்கள்
.

Comments are closed.