9 தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்

ravidreams

அண்ணனுக்கு முதல் குழந்தை பிறந்திருக்கிறது.

“தம்பி, பையனுக்குப் பேர் வைக்கணும். ர-வுல ஆரம்பிக்கிற நல்ல பேரா சொல்லுப்பா”

அண்ணன் விடிகாலையில் எழுப்பி விட்ட கடுப்பு எனக்கு.

“ரவிசங்கர்-னு வையுங்க” 🙂

“தம்பி, புதுசா உள்ள பேரு சொல்லுப்பா. ராம், ராஜா-னு பழைய பேர் எல்லாம் வேண்டாம்”

“சரிண்ணே, இணையத்தில பார்த்து சொல்றேன்”

வலையில தேடிய பிறகு தான் தெரியுது. இந்த எழுத்தில் புதுப் பெயர்கள் மிகவும் குறைவு. இருந்தாலும் ரோஷன், ரோஹித் என்று எல்லாம் வட நாட்டுப் பெயர்கள். அவற்றையும் மீறி புதிதாக வைக்க வேண்டும் என்றால் rembrandt என்று நெதர்லாந்திய ஓவியர் பெயரைத் தான் வைக்க வேண்டும். கண்டிப்பாக, இந்தியாவில் இது புதுப் பெயர் தான் 🙂

முன்பு எல்லாம் சாமிப் பெயர், குலசாமிப் பெயர், முன்னோர் பெயர், புகழ் பெற்றவர் பெயர், அரசியல்வாதி பெயர், தலைவர் பெயர் என்று வைப்பார்கள். இப்பொழுது நிறைய பேர் தொலைக்காட்சித் தொடர்களில் வருகிற பாத்திரங்களின் பெயர்களே வைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஹர்ஷினி, வர்ஷினி, தர்ஷினி என்று எல்லாம் நாடக நடிகர் பேர். ஸ, ஷ, ஜ, ஹ கலந்து பேர் வைத்தால் இன்னும் மகிழ்ச்சி மக்களுக்கு.

தொலைக்காட்சித் தொடர்களும் எண் ராசி, சோதிட நம்பிக்கைகளும் பெருமளவில் ஊர்ப்புறங்களை கெடுத்து வைத்திருக்கின்றன. எங்கள் சித்திப் பையன் பெயர் ஹர்ஷத். ஏன் ஹர்ஷத் மேத்தான்னே வைச்சிருக்கலாமே என்று கேட்டேன் 😉 200 மக்களும் 50, 60 மாடுகளும் இருக்கிற ஒரு பட்டிக்கு எதுக்கு இந்தப் பெயர்?

புதிதாக பெயர் வைக்க வேண்டாம் என்று இல்லை. ஆனால், வீட்டில் உள்ளவர்கள் அதைக் கூப்பிட முடியுற மாதிரி வைக்க வேண்டாமா? ஏற்கனவே சத்யா என்கிற எங்கள் உறவினர் பெண்ணுக்கு வீட்டுப் பெயர் வேலாயி. காயத்ரிங்கிற பொண்ணுக்கு வீட்டுப் பெயர் காயம்மா. இந்த வீட்டுப் பெயர்கள் எல்லாம் அப்பத்தாக்கள், அமத்தாக்கள் வசதிக்காக வைத்தவை. வாயில் நுழைவது போல் ஒரு பெயரை முதலிலேயே வைத்திருக்கலாம் அல்லவா? என் அக்கா பையன் பெயர் ஹரீஷ். இருந்தாலும் அப்பத்தா அரீசு என்று தான் கூப்பிட முடியும். கிரந்த எழுத்து குறித்த எந்தக் கொள்கையும் அவர்களுக்குக் கிடையாது 🙂 ஆனால், அவர்கள் வாயில் இப்படித் தான் வருகிறது என்றால் எது இயல்பான ஒலியமைதி கெடாத தமிழ், எது திணிக்கப்பட்ட ஒலி என்று எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

பிள்ளை பிறந்த பிறகு எழுத்து பார்த்து பெயர் வைப்பதை விட பிள்ளை பிறப்பதற்கு முன்பே அம்மாவும் அப்பாவும் இந்தப் பெயர் தான் என்று யோசித்து பேர் வைத்த பிள்ளைகளையும் பார்த்து இருக்கிறேன். அந்தக் குழந்தைகள் இடம் ஒரு மகிழ்ச்சியையும் பார்த்திருக்கேன்.

அப்புறம், என் மகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று அவ பிறப்பதற்கு முன்பே முடிவு செய்து விட்டோம். தமிழ் பெயர் தான் 🙂

தொடர்புடைய இடுகை: தமிழர் பெயர்கள்

**

கட்டுரை பற்றி உரையாட, வாசகர்களின் கருத்துகளை அறிய இங்கு வாருங்கள்
.

License

தமிழ் இன்று Copyright © 2014 by ravidreams. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.