16 ஆங்கில வழிய மாணவர்கள் அறிவாளிகளா?

“பள்ளிக் கல்வியில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அந்த அளவு எடுப்பதில்லையே? அதிலும், ஆங்கில வழிய மாணவர்களைக் காட்டிலும் தமிழ் வழிய மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுக்கிறார்களே, ஏன்?”

இது, ஊரில் தமிழ் வழியத்தில் பயின்று வரும் தங்கை ஒருத்தியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைப் பார்த்த பிறகு அப்பா கேட்ட கேள்வி.

பத்தாம் வகுப்பை விட பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைய காரணங்கள்:

* பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்திட்டம் சற்று மாறுபட்டது. கல்லூரிக் கல்விக்கு முன்னோட்டமாக சற்று ஆழமான புதிய தலைப்புகளை அறிமுகப்படுத்துவது. எனவே, பத்தாம் வகுப்பில் புரியாமல் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவது போல் பன்னிரண்டாம் வகுப்பில் இயலாது.

* பன்னிரண்டாம் வகுப்புக்குத் திறனும் அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்கள் தேவை. இது எல்லா பள்ளகளிலும் அமையாது.

* 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்களின் விடலைப் பருவம் ஒரு முக்கியமான கால கட்டம். இந்த வயதில் சிலர் திசை மாறுவதைக் காணலாம்.

தமிழ் வழிய மாணவர்களை விட ஆங்கில வழிய மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் எடுக்கிறார்களா?

இதற்குத் தெளிவான புள்ளிவிவரங்கள் உள்ளனவா தெரியவில்லை. மனத் தோற்றமாக இருக்கலாம். உண்மையாகவே இருந்தாலும், அதற்கான காரணங்கள் மிக எளிமையாக விளக்கலாம்:

* ஆங்கில வழியப் பள்ளிகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகள். நகரத்தில் உள்ளவை. இந்த அடிப்படையிலேயே ஆங்கிலம், தமிழ் வழியப் பள்ளிகளுக்கான வேறுபாட்டைக் காண இயலும். ஆங்கில வழியத்தில் படிப்பவர்கள் எல்லாரும் பணக்காரர்கள் இல்லாவிட்டாலும், கல்விக்காக செலவு செய்ய முனைபவர்கள். “இவ்வளவு காசு செலவு செய்யுறோமே.. ஒழுங்கா உக்கார்ந்து படி” என்று பல தனியார் பள்ளிப் பெற்றோர்கள் கூறுவதைக் கேட்கலாம். ஆக, இந்த மாணவர்களுக்கு இருக்க வேண்டிய ஒரே முனைப்பு படிப்பு தான். ஆனால், தமிழ் வழிய மாணவர்கள் பெரும்பாலும் வறிய பின்னணியில் உள்ளவர்கள். ஊர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள். பள்ளியில் படிக்கும் நேரம் போக வீட்டில், வயலில், கடையில் பெற்றோருக்கு உதவியாக செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கும். எனவே, அவர்கள் கவனம் செலுத்திப் படிப்பதற்கான நேரமும் வீட்டுச் சூழலும் குறைவே.

* ஒரு வேளை பள்ளியில் உள்ள ஆசிரியரின் பயிற்சி போதாவிட்டால், சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லும் வாய்ப்பு தமிழ் வழிய மாணவர்களுக்குக் குறைவு.

* ஆங்கில வழியப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் போதே திறம் கூடிய மாணவர்களைச் சேர்க்கிறார்கள். எனவே, அவர்கள் தேர்வு முடிவுகளும் சிறப்பாக வந்தால் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

* நகரத்தில் உள்ள தனியார் ஆங்கில வழியப் பள்ளி மாணவர்களின் உறவு வட்டம், நட்பு வட்டம் சற்று விழிப்புணர்வு கூடியதாக இருக்கும். பள்ளிப்படிப்பு முடித்த பிறகு என்ன செய்ய வேண்டும், அதற்கு எப்படிப் படிக்க வேண்டும் என்பன போன்ற வழிகாட்டல்களும் அதற்கான முனைப்பும் இருக்கும். தமிழ் வழிய மாணவர்களிடம் இவை சற்றுக் குறைவாக இருக்கலாம்.

எனவே, தமிழ் வழிய மாணவர்களின் தேர்வுத் திறம் சற்றுக் குறைவாக இருந்தால் அதற்கு அவர்கள் சமூகப் பின்னணி தான் காரணமே ஒழிய பயிலும் மொழி ஒரு காரணமில்லை. அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதோடு அவர்கள் குடும்பத்தின் வாழ்க்கைத் தரம், சமூகப் பின்னணியை உயர்த்துவதும் முக்கியத் தேவை ஆகும்.

License

தமிழ் இன்று Copyright © 2014 by Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *