19 ஆங்கில எழுத்து முறை இலகுவானதா?

“ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டுமே உள்ளன. தமிழில் 247 எழுத்துகள் இருப்பதால் குழந்தைகள் கற்றுக் கொள்ளச் சிரமப்படுகிறார்கள்” என்று சிலர் எழுதுகிறார்கள்.

ஆங்கில எழுத்துமுறை இலகுவானதா? இல்லை.

ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகள் 26. இவற்றில் இருந்து மாறுபடும் சிறிய எழுத்து வடிவங்கள் 16. மொத்தம் 42 எழுத்துகள்.

எந்தெந்த இடங்களில் பெரிய எழுத்துகள் வரும், வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

chalk என்பதில் ch ச ஒலி தரும். அதுவே, character என்பதில் ch க ஒலி தரும். சில இடங்களில் t, b அமைதியாகி ஒலி தராது. இலட்சக்கணக்கான சொற்களின் ஒலிப்புகளை நினைவில் கொள்ள வேண்டும். வெறும் எழுத்துகளை மட்டும் வைத்து புதிய சொற்களின் ஒலிப்பை அறிய இயலாது.

ஒரு மொழி, தந்தி அடிப்பது போல் ஒன்றிரண்டு குறியீடுகளை மட்டும் எழுத்துகளாக வைத்துக் கொள்ளலாம்; சீன மொழி போல் ஆயிரக்கணக்கான எழுத்துகள் வைத்துக் கொள்ளலாம்; இரண்டுமே இலகு இல்லை.

எத்தனை எழுத்துகள் என்றாலும் அவற்றில் சீர்முறை இருப்பது நலம். இச்சீர்முறை தமிழில் உண்டு. ஒரு முறை எழுத்துகளைக் கற்றுக் கொண்டால், எந்தச் சொல்லையும் படிக்கலாம். எழுதலாம். தமிழில் எழுதுவதற்குத் தேவைப்படும் சிறிதளவு கூடுதல் உழைப்பு, படிப்பதற்குத் தேவைப்படும் உழைப்பை பல மடங்கு குறைக்கிறது. எழுதுவது ஒரு முறையே. பல கோடி மக்கள் பல கோடி முறை அதைப் படிக்கிறார்கள். படிப்பது இலகுவாக இருப்பதே முக்கியம்.

கடினமான ஆங்கில மொழியைக் கற்கும் குழந்தைகளால், கண்டிப்பாக அதை விட பல மடங்கு இலகுவான தமிழையும் கற்றுக் கொள்ள இயலும்.

**

கட்டுரை பற்றி உரையாட, வாசகர்களின் கருத்துகளை அறிய இங்கு வாருங்கள்
.

Comments are closed.